தென்னிலங்கை அரசியல் போட்டியில் கள்வர்கள் பாதுகாக்கப்படுவார்களா?

தென்னிலங்கை அரசியல் போட்டியில் கள்வர்கள் பாதுகாக்கப்படுவார்களா?

22 January 2018 02:25 am

தென்னிலங்கை அரசியல் போக்கானது தெளிவற்றதான சூழலை நோக்கிச் செல்கின்றது. மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்த ஜனாதிபதி, விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு பின்னடிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தி நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆதரவைப் பெறுவதன் ஊடாக ஆட்சியை தம் வசப்படுத்த ஜனாதிபதி முயற்சிப்பதாகவே யூகங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் மத்திய வங்கியில் நடைபெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று மக்கள் மத்தியில் முதன்மை பெற்றுள்ளதால், ஏற்கனவே அரசாங்கம் விசாரணைகள் நடத்திவந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கால மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பன மறக்கப்பட்டுவிடுமோ என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நடைபெற்ற விஷேட நாடாளுமன்ற அமர்வில் ஒரு பக்கமாக ‘ரணில் கள்ளன்’ என்று ஒரு அணியினரும், இன்னொரு பக்கமாக ‘மஹிந்த கள்ளன்’ என்று ஒரு அணியினருமாக கோஷமிட்டு அமளிதுமளியை ஏற்படுத்தி அன்றைய நாடாளுமன்ற நிகழ்வை கேலிக்கூத்தாக்கிவிட்டிருந்தார்கள்.

அந்த அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் 50 இலட்சம் ரூபாய்களை நஷ்டமாக்கிக்கொண்டதைத் தவிர உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் மத்திய வங்கி மோசடி விசாரணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இதற்கிடையே வங்கி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதும், அது தொடர்பாக ஊடகங்களில் கருத்துக் கூறுவதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையுமென ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. இதனால், தேர்தல் முடிந்த பிறகு வங்கிக் கொள்ளை தொடர்பான விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமா என்றும் அந்தக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட கட்சி ஒன்றின் பெயரை குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி தேர்தல் காலத்தில் செயற்படுவது தவறுதான் என்றாலும், அதைத் தடுக்கக்கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஆனால் குற்றச்சாட்டு தொடர்பாக தமது பக்க நியாயத்தை, சம்பந்தப்பட்ட கட்சி வெளிப்படுத்துவதை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்யாமல் வெளிப்படுத்துவது அவசியம் என்பதை தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை மறுதலித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் கட்டமாக வீசிய வாள் நல்லாட்சியிலுள்ள தனது நண்பர்களின் தலையையே சீவியுள்ள நிலையில், ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் எழுந்த விமர்சனங்களும், அழுத்தங்களும் ஆட்சியை கலையவிடாமல் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியதால், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையை பின்தள்ளும் விதமாக இன்னுமொரு செய்தியை உருவாக்க வேண்டிய நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

ஆகையால்தான் இப்போது எயார் லங்கா விமான சேவை தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த விசாரணையும் அவசியமானதுதான். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே வங்கி மோசடி தொடர்பாக விசாரணை அறிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி நாட்டுக்கும், மக்களுக்கும் நியாயம் கிடைக்கச்செய்யாமல் இன்னொரு ஆணைக்குழு விசாரணை என்று கூறுவது ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காகவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தி நடந்த தவறை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்திய வகையில் ஜனாதிபதி மைத்திரிபால நேர்மையானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் காணப்படுகின்றார் என்று மக்கள் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். இப்போது வங்கி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கையை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குற்றவாளிகளை பாதகாப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா என்று மக்கள் சந்தேகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தனது ஆட்சிக்காலத்தின் எல்லை எதுவரை என்று தெரிந்துகொள்வதற்கு ஜனாதிபதி முயற்சித்த விடயமானது, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட தற்போதைய ஆட்சியின் பங்காளிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆண்டு ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும்போது ‘நான் ஒரு தடவைதான் பதவி வகிப்பேன்’ என்று கூறியிருந்த நிலையில் இப்போது தொடர்ந்தும் அந்த அதிகாரத்தில் இருப்பதற்கு முயற்சிக்கின்றாரா?

அல்லது 2020ஆம் ஆண்டு மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு போட்டிக்களத்தில் குதிப்பாரா? அவ்வாறாயில் 2020ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போதே அதற்கான அரசியல் காய் நகர்த்தல்களை செய்யத் தொடங்கிவிட்டாரா என்பதையிட்டு பங்காளிக்கட்சிகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டன்.

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் அல்லது அமைச்சரவையை மாற்றம் செய்வதற்கு ஜனாதிபதி சிந்தித்து வருவதையும் உணர முடிகின்றது. ஆனால் அமைச்சரவையின் தலைமை அமைச்சராக இருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கு இணங்குவாரா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று குறித்து ஜனாதிபதி மைத்திரிபாலவை சிந்திக்கச் செய்யும் காரணிகள் எதுவாக இருக்கின்றன என்பதை ஆராயும்போது, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி பின்னடைவைச் சந்திக்குமாக இருந்தால் அக்கட்சியின் பின்னடைவானது தனது கரங்களுக்கு பலமாக அமையும் என்றும், பலமான நிலையிலிருந்து தான் முன்னெடுக்கும் அரசியல் முடிவுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் பலர் ஆதரவாக இருப்பார்கள் என்று ஜனாதிபதி சிந்திக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் ஆதரவளிக்க முன்வரும்போது அவர்களையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் பலமான நிலைமையை அடைய முடியுமாக இருந்தால், அமைச்சரவையை மாற்றியமைத்து புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கும் ஜனாதிபதி சிந்திக்கலாம். புதிய அமைச்சரவையில் அங்கத்துவம் பெறமுடியுமாக இருந்தால், அதற்கான உத்தரவாதம் கிடைக்குமாக இருந்தால் தாய்க் கட்சியிலிருந்து தாவுவதற்கு பலர் ஆயத்தமாகவே இருப்பதும் நாம் அறிந்ததுதான்.

இவ்வாறான நிலையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் முடிவானது தென்னிலங்கை அரசியலில் சில மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள முக்கோணப் போட்டியில், பொது எதிரணியா, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பா, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியா முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்ததை விடவும் பொது எதிரணியின் செயற்பாடுகள் தற்போது இல்லை என்றும், பிணைமுறி மோசடி மீதான விசாரணையை ஜனாதிபதி நேர்மையாகவும், கால தாமதமில்லாமலும் முன்னெடுத்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி பிரகாசமானது என்றும் இப்போதைக்கு தெரியவருகின்றது. எதுவாக இருந்தாலும், இந்த இரு அணிகளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமை சிந்திக்க வேண்டியதாகவே தெரிகின்றது.

ஈழத்துக் கதிரவன்
- நன்றி ஆதவன்