மைத்திரி ஆட்சியிலும் மலையகத்திற்கு ஏமாற்றம்தானா?

மைத்திரி ஆட்சியிலும் மலையகத்திற்கு ஏமாற்றம்தானா?

17 February 2018 10:52 am

இலங்கையின் பொருளாதரம் வளர்ச்சியை எட்டி வருவதாக அரசாங்கத் தரப்புக்கள் கூறுகின்றன. கடந்த ஆட்சியில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பொரு ளாதார வளர்ச்சி 7 வீதமாக காணப்பட்டதாக அப்போதைய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் அது உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட கருத்து என்றும் கூறப்படுகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் தற்போதும் முழுமையாக உள்ளூர் உற்பத்தியினால் தன்னிறைவை எட்டாத நாடாக இலங்கை இருந்துவருகின்றது.

இந்நாட்டினை தன்னிறைவடையச் செய்யும் தொழிற்துறைகளை மேம்படுத்துவது குறித்து இதுவரையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் பெருமளவில் அக்கறை காட்டாமையே இதற்கு பிரதான காரணமாகும்.

வரலாற்றுக் காலத்திலேயே நெல் உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு கண்ட நாடு என்று பெருமிதம் பேசிக்கொண்டாலும் போட்டித்தன்மை மிக்க நவீன உலகத்தில் பொருளாதார உற்பத்திகளை கொண்டு இலங்கையினால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருப்பது கவலைக்கிடமானது.

இவ்வாறிருக்கின்ற போது வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களில் பெருந்தொகையிலானோர் மலையகத்திலேயே வாழ்கின்றனர். இந்த தமிழ் சமூகம் நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையின் இரண்டாம் தர உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பொருளான தேயிலை விளைவிப்பவர்கள்.

தேயிலைக் காடுகளில் வாழும் மக்கள் என்பதாலோ என்னவோ எந்தவொரு அரசாங்கமும் இம்மக்கள் குறித்து அழமாக அவதானம் செலுத்தியதாய் இல்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திலாவது மலையகத்திலும் கிராமக் கட்டமைப்பினை உருவாக்க லயன் வாழ்க்கை மாற்றியமைக்க வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டதையும், மலையகத்தின் பிரதேச கட்டமைப்புக்களாக கூறுவதற்கு சட்ட ரீதியாக காணப்பட்ட தடைகளை நீக்கியுள்ளமையும் வரவேற்கத்தக்கதுதான்.

இருப்பினும், இன்னும் மலையகத்தின் இருண்ட பக்கம் மாறவில்லை என்பதுதான் நிதர்சனம். மலையகத்தின் மக்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்களை நிவர்த்திப்பதற்கு மாறாக, அந்தக் கஷ்டங்களை காண்பித்து அரசியல் லாபமீட்டும் செயற்பாடுகளைத்தான் மலையக அரசியல் சக்திகளும் முன்னெடுத்தன.

அண்மையில் கூட இலங்கைத் தேயிலையை ரஷ்யா தடை செய்துவிட்டது என்றவுடன், அரசாங்கம் சற்றுத் திணறியது. இலங்கையின் பிரதான வருவாயில் இரண்டாம் இடத்தில் தேயிலை இருக்கும்போது அதனை ரஷ்யா போன்ற நாடுகள் தடை செய்துவிட்டால் இலங்கையின் நிலைவரம் என்னவென்பதை விளக்கிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

காலம் காலமாக தேர்தல் வரும் தருணங்களில் மாத்திரம் மலையகத்திற்கு செல்லும் அரசியல் வாதிகள் மலையக மக்களுக்கு வீடுகளை பெற்றுத்தருவதாகவும், லயன் வாழ்க்கையை ஒழிப்பதாகவும் போலி வாக்குறுதிகளையே வழங்கி வந்தனர். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியன. ஆனால், இறுதியில் அதுவும் கானல் நீரானது.

அதனையடுத்து 1000 ரூபாயாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்புச் செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அந்த சமயத்தில் நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டதால் புதிதாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தை கையிலெடுத்திருந்தது.

புதிய அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து பேசுவார்கள் 1000 ரூபாவாக கோரப்பட்ட அடிப்படை சம்பளம் 800 ரூபாகவேனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு நிவாரணங்களை வழங்கி, அவர்களை மேம்படுத்துவதிலேயே இருந்தது என்பது கசப்பான உண்மையாகும்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இவ்வாறான போக்கினால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு விவகாரமும் போலி வாக்குறுதியாகிப்போனது. அதேநேரம் கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை விஞ்சியதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரங்கள் இருக்கின்றமையும் வெளிப்படையானது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் என்பது புதிதல்லவே. எனவே, இந்த ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் சக்தி தொழிலாளர்களுக்கு இருந்தது. எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு தடவையும் ஏமாற்றத்தைத்தான் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எழுதிவைக்கப்பட்ட விதியல்ல என்பதை மக்களும் உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, கடந்த காலங்களில் சம்பளப் பிரச்சினை தலையெடுத்தபோது தோட்டத் தொழிலாளர்கள் வீதியிலிறங்கி தமது உரிமைக்காக போராடியிருந்தனர். இதனால் அரசாங்கத்தின் அவதானம் அதிகமாக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் என்னவென்பதை அறிவதற்காக திரும்பியது. இவ்வாறு மலையக மக்கள் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் உரிமைக்காக போராட முன்வந்திருப்பார்களாயின் இன்று ஓரளவேனும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக் தரம் மேம்படுத்தப்பட்டிருக்கும்.

மலையக தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பது கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதற்கு தேயிலைத்துறை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி வகிப்பதே பிரதான சான்றாகும். எனவே, மலையக மக்களின் அடுத்தகட்ட போராட்டம் தங்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற விடயத்தை மையப்படுத்தியதாக அமையுமாயின், அது மலையக தமிழ் சமூகம் நடுத்தர சமூகமாக மேம்படுவதற்கான கதவுகளை திறக்கும்.

காரணம், நூற்றாண்டுகாலமாக பெருந்தோட்டக் கம்பனிகளின் அடிவருடிகளாக வாழ்ந்துவிட்ட மக்களுக்கு தற்போது சாப விமோசனம் தேவைப்படுகின்றன. எனவே, அதற்கான விமோசனங்களை வழங்க அரசாங்கம் தயாராக இல்லாவிட்டால், அதனை பெற்றுக்கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பாகும். உலக நாடுகளின் வரலாறுகளை பார்க்கையில் எங்குமே சுயமான சுதந்திரம் பெற்ற நாடுகள் இருக்க முடியாது. சுதந்திரம் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் ஆளும் தரப்புக்களிடமிருந்து மக்கள் கேட்டுப்பெற்ற சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளன.

எனவே, மலையகத்தில் ஒரு சமூக,பொருளாதார மற்றும் கல்விசார் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அந்தப் புரட்சியை நடத்திக்காட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்களினாலேயே முடியும். இது தற்போதுள்ள மலையக சமூகத்திற்கு பெருமளவில் தாக்கம் செலுத்தாவிட்டாலும், மலையகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இளைய சமூகத்தின் வாழ்க்கையில் இந்த மாற்றம் நிச்சயம் தாக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மாற்றங்களும் புரட்சிகளும் மிக அவசியமானவைதான். அதற்கான மாற்று சிந்தனைகளையும் முதலில் மலையக சமூகம் ஏற்றுக் கொள்ள தயாராக வேண்டும்.

இவ்வாறான மாற்று சிந்தனைகளை ஏற்று, இனிவரும் காலங்களிலாவது மலையக சமூகம் தமது வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கைச்சூழலையும் மேம்படுத்திக்கொள்வது குறித்து சிந்திக்கத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்திலும் அடிமை வாழ்க்கை மாத்திரம்தான் எஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக மலையகம் என்றவுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளத் தயாராகின்றோம் என்றுதான் இதுவரைகாலமிருந்த அனைத்து அரசாங்கங்களுமே தெரிவித்து வந்துள்ளன. இது இத்தனை ஆண்டுகளாகியும் மலையக சமூகத்தை இந்திய வம்சாவளியினர் என்று முத்திரைகுத்தியே வைத்திருக்க வேண்டிய அவசியம் ஆளும் தரப்புக்களுக்கு இருந்துள்ளது என்பதையே வெளிக்காட்டுகின்றது.

இந்த நிலைமை காணப்படுகின்றபோது இந்தியாவிற்கு கடுமையான போட்டியாகவிருக்கும் சீனாவும் இலங்கையின் மலையகப் பகுதிகளில் தடம்பதிக்கும் முனைப்புக்களை முன்னெடுக்க தயாராகி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனவே ஒரு நாட்டில் அடிமைப்படுத்தப்பட்ட சமூகம் சொந்த நாட்டிற்குள் அந்நிய நாட்டு பல்தேசிய நிறுவனங்களினாலும் அடிமைப்படுத்தப்படும் நிலைப்பாட்டினை உருவாக்கிவிடக்கூடாது என்பதையே கூற முற்படுகின்றோம்.

மலையகத்தின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டால் என்ன மேம்படாவிட்டால் என்ன அவர்களின் உழைப்பின் வலிமை இன்னும் குன்றவில்லையே எனவே, அவர்களால் பயனடையும் அரசாங்கத்திற்கு அது பாரிய நட்டமாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. அப்படி தெரிந்தாலும் மக்களுக்கு எந்தவொரு உதவிகளையும் அவர்கள் மேற்கொள்ளப்போவதில்லை என்பது அரசியல் வாதிகளிடத்தில் மக்கள் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட பாடம்.

இவ்வாறிருக்க, அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டமொன்றிற்கு தலைமைதாங்குவதற்கான பதுளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலையக மக்களின் இத்தனைகாலமும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக போலி வாக்குறுதிகளே வழங்கப்பட்டன அதற்கு மாறாக, தான் நியமித்த பொருளாதார சபையினால் மலையக மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை காலமும் மலையக மக்களில் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென ஒப்புக்கொண்டமை வரவேற்கத்தக்கதான குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆளும் தரப்பாக இருந்தபோதெல்லாம் அவர்களுக்கு பலமான பங்காளிக் கட்சியாவிருந்த தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமர்ந்திருந்த அதே மேடையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியது வேடிக்கையானது மாத்திரமன்றி வேதனையான வியமுமாகும்.

எவ்வாறாயினும் போலி வாக்குறுதிகளுக்கு மாறாக இனிவரும் காலங்களிலாவது மலையக மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம். இருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பொருளாதாரக் குழு எந்த விதத்தில் மலையக மக்கள் வாழ்வை மேம்படுத்துவதற்கு திட்டம் வகுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அந்த திட்டங்களும் கானல் நீராகிவிடாமல் இருக்குமாயின் சிறந்ததுதான். மைத்திரி ஆட்சியில் மலையகத்திற்கு கிடைக்கப்போவது ஏமாற்றமா அல்லது சமூக மாற்றமா என்பதை இரு வருடங்களில் பார்ததுவிட முடியும். ஆனால், நிலையான ஒரு சமூக,பொருளாதார மாற்றத்தினை நுகர எத்தனிக்கும் மலையகத்தின் மாற்றத்திற்கு மலையக சமூகம்தான் வித்திட வேண்டும்.

குறிப்பு. இந்த நாட்டின் தமிழ் பேசும் சமூகம் என்று மத்தியதர பொருளாதார சக்திகளாக உருவாகின்றார்களோ அன்றுதான் இந்நாடு முழுமையான விமோசனம் பெறும். பாரபட்சங்கள் தொடர்ந்தும் நீடிக்குமாயின் நாட்டின் அவிருத்தியிலும் அது தாக்கம் செலுத்திக்கொண்டுதான் இருக்கும்.

க.கமல்