கோத்தபாய ஜனாதிபதி பதவியை வகிப்பதற்குப் பொருத்தமானவரா?

கோத்தபாய ஜனாதிபதி பதவியை வகிப்பதற்குப் பொருத்தமானவரா?

17 March 2018 07:29 pm

சமீப நாள்களாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும், ஜனாதிபதி பதவியையும் இணைத்து செய்திகள் வௌிவந்து கொண்டிருக்கின்றன.

அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாயவும் இந்தத் தகவல்களை மறுக்கவில்லை.

தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பதற்குத் தாம் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளதை அவரது சம்மதமாகவே கொள்ள முடியும்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச இன்னுமொரு தடவை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்தல் களத்தில் இறக்க வேண்டிய தேவை அவரது பரம்பரையினருக்கு எழுந்துள்ளது.

மகிந்த குடும்பத்தினரும் அவரைச் சார்ந்தவர்களும் தம்மீது சுமத்தப்பட் டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் மகிந்தவுக்கு நெருக்கமான ஒருவர் நாட்டின் உயர் பதவியை வகிப்பது அவசியமாகின்றது.

கோத்தபாய ராஜபக்சவும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளவரே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கோத்தபாயவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்தான். நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து தவிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

அவன் காட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் அவரொரு முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகின்றார்.கோத்தபாய விசாரணைகளுக்கு முகம்கொடுத்து தம்மையொரு நிரபராதியென நிரூபிக்க வேண்டியதைத் தவிர்த்து குறுக்கு வழியால் தப்பிக்க முயற்சி செய்கின்றார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்ற மகிந்த குடும்பத்தினரும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் தான். இந்த நிலையில் கோத்தபாய நாட்டின் அதியுயர் பதவியை வகிப்பதற்குப் பொருத்தமானவரா? என்ற வினா எழாமலில்லை.

இவை யாவற்றுக்கும் மேலாக இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் படைகளின் பிரதம தளபதிப் பதவிக்கும் உரித்தாகவிருந்த மகிந்தவும், பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் கோத்தபாயவும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர்.

மேற்படி விடயங்கள் தொடர்பாக படையினர் மீது குற்றம் சுமத்துவதையும் இவை தொடர்பாக பன்னாட்டு நீதிபதிகளின் உதவியுடன் விசாரணை இடம்பெறுதையும் கோத்தபாயவும் விரும்பவில்லை.

மகிந்த இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து வௌியிட்டு வருகின்றார். முறையான விசாரணைகள் இடம்பெற்று படையினர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின், மகிந்த மற்றும் கோத்தபாய கூட குற்றவாளிகளென அடையாளம் காணப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது.

இத்தகைய ஒருவர் நாட்டின் அரச தலைவர் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவரெனக் கருத முடியவில்லை.

தம்மையொரு பௌத்த சிங்களவரென அடையாளம் காட்டுவதற்கு கோத்தபாய ஒருபோதுமே பின்நிற்பதில்லை.

பௌத்த தேரர்களின் வழிகாட்டலின் கீழேயே அரசு செயற்படவேண்டுமென அவர் வலியுறுத்திக் கூறி வருகிறார். அண்மையில் அவர் தெரிவித்த கருத்து கவனத்துக்குரியது. ‘

மகாநாயக்க தேரர்களைத் தற்போதைய அரசு மதிப்பதில்லை. அவர்களின் ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டவரைவை நிறைவேற்ற வேண்டாமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை என கோத்தபாய கூறியிருந்தமை அவரது மனவுணர்வை வௌிச்சம் போட்டுக்காட்டி விட்டது.

மகாநாயக்க தேரர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சில பௌத்த தேரர்கள் போரை ஊக்குவிக்கும் முகமாக நடந்து கொண்டதை நாம் மறக்க முடியாது.

அகிம்சையைப் போதிக்க வேண்டிய அவர்கள்,][ போரை ஊக்குவிக்கும் முகமாக படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கியதை எந்த வகையில்தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

புதிய அரசமைப்பின் உருவாக்கம் கூட மகாநாயக்கர்களின் எதிர்ப்பின் காரணமாகவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இனிமேல் இது உருவாகுவதற்கான சாத்தியம் இல்லாமற்கூடப் போகலாம்.

தென்பகுதி மக்கள் எப்போதுமே இனவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவர்களிடையே காணப்படுகின்ற கல்விமான்கள் சிலர் இனவாதிகளாகத் தோற்றம் பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் வழங்குகின்ற தவறான ஆலோசனைகள் சிறுபான்மையினருக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஒருவேளை கோத்தபாய அடுத்த ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பு ஏற்படுமானால், அவரது ஆட்சி கூட மகிந்தவின் ஆட்சியை நினைவுபடுத்துவதாகவே அமையுமென்பதில் ஐயமில்லை.