ரஜீவ் கொலையின் மறுபக்கம்!!!
Saturday, 07 Dec 2019

ரஜீவ் கொலையின் மறுபக்கம்!!!

13 August 2018 07:14 am

ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது. அதன் விளைவாகப் பொய்யான ஆதாரங்களை எல்லாம் அவர்கள் சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள்! தடயங்களும் ஆதாரங்களும் சாட்சிகளும் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டன. அண்மையில் மீனவர்கள் கடத்தப்பட்ட விடயத்தில்கூட பல இல்லாதபொல்லாததை இந்திய அரசு கூறுவதைக் காணலாம்.

ராஜீவ் கொலையுடன் சந்திரசுவாமி என்பவர் தொடர்புபட்டுள்ளதாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றசம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரசுக் கட்சிக்காரர்கள் ராஜீவ் இறக்கும்போது அவரின் இடத்தில் இருந்து மூன்று மீற்றர் சுற்றளவுக்கு அப்பால் இருந்திருக்கின்றனர். ராஜீவ் காந்தி போன்ற பிரபல நபர் தமிழகத்தில் உள்ள கூட்டம் ஒன்றுக்கு வரும்போது அங்குள்ள காங்கிரசுக் கட்சிக்காரர்கள் எல்லாம் அவர் அருகே நின்று தங்களையும் பிரபலப்படுத்தப் பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக, மூப்பனார் மற்றும் இன்னொரு ஆள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது மேடைக்கு அருகே இருந்தார்கள் என்றும், சிறீபெரும்பதூரில் போட்டியிட்ட வேட்பாளர்கூட மூன்றுமீற்றர் சுற்றளவிற்கு வெளியே இருந்தாராம்.

அண்மையில் மாலைதீவுக் கடலில் புலிகளின் ஆயுதப் படகு வேடத்தில் றோ செய்த நாடகத்தில் மாலைதீவு மீனவர்களைத் தாக்கிவிட்டு அந்தப் படகு மாலைதீவுக் கடற்படை வரும்வரை பார்த்துக்கொண்டு நின்றதாம். முதலில் புலிகளோ இல்லை வேறு யாரேனுமோ ஆயுதம் கடத்தினால் நாலாம்பேருக்குத் தெரியாமல் போயிருப்பார்கள். ஆயுதம் கடத்துபவர்கள் ஆயுதும் இல்லாத மீனவர்கள்மீது தாக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்தததாக, படகில் இருந்து தப்பிய பொறிஞர் படகு பழுதாகி இருந்ததாகக் குறிப்பிடவில்லை. எனவே மாலைதீவுக் கடற்படையின் படகு அங்கு வரும்வரையும் நகராமல் அந்த ஆயுதப்படகு நின்றதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை, எல்லாம் அந்தப் படகு பிடிபட வேண்டும் என்பதே.

இதற்கு முன்னர் புளொட் இயக்கத்தை பலிக்கடாவாகப் பயன்படுத்தி இந்திய அரணத்தை(இராணுவத்தை) மாலைதீவில் நிலைநிறுத்த றோ நாடகம் ஒன்றை ஆடியதும் ஞாவகம் இருக்கலாம். அவை போல்தான் ராஜீவ் காந்தி கொலையின் பின்னால் காங்கிரசுக் காரர்கள், பிரேமதாசா மற்றும் றோ இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்திய உளவுத்துறை என்ன, உலகில் உள்ள பல உளவுத்துறைகளும் பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கு உள்ள அரசியல் வாதிகளுக்கும் சார்பாக ஈடுபடுவது வழக்கம்தானே.

கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசன் உண்மையில் பிரபாகரன் சொன்னதற்கு அமைய ராஜீவைக் கொன்றான் என்றால் புலிகளிடம் உள்ள வேகப் படகு ஒன்றன்மூலம் சிவராசனைத் தமிழகத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டுச்சென்றிருக்கலாம். ஆனால் சிவராசன் அவ்வாறு செல்லவில்லை. சிவராசன் சந்திரசுவாமி எனப்படும் காங்கிரசுக் காரரின் சொல்லுக்கு அமையவே ராஜீவைக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. அதற்கு முன்னர் தில்லி சென்ற சிவராசன் அங்கு சந்திரசுவாமியின் மாளிகையில் நடந்த யாகம் போன்ற நிகழ்வில் கலந்துகொண்டாராம் (அது ராஜீவைக் கொல்வதற்காக செய்யப்பட்ட யாகம் என்றும் பேசப்படுகின்றது).

ராஜீவ் கொலைக்குப் பின்னர் சிவராசன் இன்னும் சில கொலைகளைச் செய்துவிட்டு ஐரோப்பா செல்வதற்கு சந்திரசுவாமி பணம் கொடுத்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. சந்திரசுவாமிக்கும் அமெரிக்க சி.ஐக்கும் தொடர்பு இருந்ததைக்கூட சிலர் கூறுகின்றனர்.

சிவராசன் கொலைசெய்யப்பட்ட வீட்டில் இருந்த சிவராசனின் சகாக்கள் சயனைட் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் சிவராசன் தலையில் சுடப்பட்டு இறந்திருந்தார். சிவராசன் பெங்களுரில் தங்கியிருந்த வீட்டை சுற்றி இந்திய அதிரடிப்படை, புலனாய்வுத்துறை, சயனைட் நஞ்சைத் தணிப்பதில் அனுபவமிக்க மருத்துவர்கள் போன்றோர் இருந்தார்கள். அவ்வாறு இருந்தும் சிவராசனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டார்கள். அதில் முக்கியமாக சிவராசனும் இன்னொருவரினதும் உடலங்கள் உடனே எரிக்கப்பட்டுவிட்டன! ஆனால் தற்கொலைதாரி தானுவின் உடலம் மட்டும் பத்திரமாகப் பேணப்பட்டது!

ஒரு பெரும் கொலையில் முக்கிய நபரான சிவராசன் எனப்பட்ட ஒற்றைக் கண்ணணின் உடலம் ஏன் உடனே எரிக்கப்பட்டது? யாரைக் காப்பாற்ற? மேலும் ராஜீவ் காந்தியின் பறனை சில கோளாறின் நிமித்தம் ராஜீவின் பயணத்தைச் சுணக்கிவிட, ராஜீவ் கூறினாராம் தான் கூட்டத்திற்குப் போகாவிட்டால் மரகதம் சந்திரசேகரர் (சிறீ பெரம்பதூரின் வேட்பாளர்) குறைநினைப்பார் என்று. ஆனால் விசாரனைகளின்போது மரகதம் தான் ராஜீவைக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

காங்கிரசு நா.உ(M.P) மரகதம் சந்திரசேகர், அவரது மகளும் ச.அ(சட்ட அவை) உறுப்பினருமான லதா பிரியகுமார் இருவருக்கும் ராஜீவுக்கு மாலைபோட காத்துநின்ற தானுவை நிரையில் கொண்டுபோய்விட்ட லதா கண்ணனைத் தெரியும். ஆனால் அது தொடர்பாக அவர்கள் இருவரும் விசாரனைக்கு உட்படுத்தப்படவில்லை! காங்கிரசுக் கட்சிக்காரர் ராமசாமி, சந்திரசுவாமி, மரகதம் சந்திரசேகரர், லதா பிரியகுமார் போன்றவர்கள் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் என்பதால் ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பாக அவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் அப்பாவி நளினியும் முருகனும் சிறையில் வாடுகிறார்கள்.

மேலும் தானுவுக்குப் பயிற்சி அளிப்பதில் இருந்து தானு ராஜீவுக்கு மாலைபோடும்வரை படமெடுத்துக்கொண்டன கரிஸ் பாபு சம்பவத்தில் இறந்துவிடுகிறார். ஆனால் அவரின் புகைப்படக்கருவியைப்பெற அவரது தந்தையாரைப் புலிகள் அனுப்பினார்கள் என்று குற்றம் சாட்டுவது எவ்வளவுக்கு நம்பத்தக்கது? இதற்கும் அண்மையில் மாலைதீவில் புலிகளின் ஆயுதப் படகு மாலைதீவுக் கடற்படை வருகைக்குக் காத்துநின்று மூழ்கினதற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்தீர்களா? சிவராசன் ரெலோ இயக்கத்தில் இருந்ததாகவும் ராஜீவ் கொலைக்கு காங்கிரசு, றோ அல்லது பிரேமதாசாவால் பயன்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.

றோ இதை செய்யாமல் இருந்திருந்தாலும் புலிகளின் இரண்டாம் தளம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தில் இருந்து புலிகளை வேரோடு எடுக்க இந்த சம்பவம் பெரிதும் உதவியது. ஆனால், அதனால் றோ நினைத்ததுபோல் புலிகள் பலவீனமடையவில்லை. ராஜீவ் கொலைவழக்கில் மாத்தையா சம்பந்தப்படுத்தப்படாததும் மேலும் றோ ராஜீவ்கொலைக்குப் பிண்ணனியில் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. இதன்பின்னர் மாத்தையாவை வைத்து பிரபாகரனைக் கொல்லப்போட்ட திட்டம் புலிகளுக்குத் தெரியவர மாத்தையா விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ராஜீவ் கொலைக்கு முன்னர் காசி ஆனந்தன் மற்றும் சில புலிகளின் முக்கியத்தர்கள் ராஜீவோடு சந்தித்துப் Nபுசியுள்ளார்கள். ஆனால் ஏதோ நம்பவைத்துக் களுத்தறுத்த கதையில் அந்தப் பேச்சுக்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் ராஜீவ் புலிகளுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள முற்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. எனவே ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் அது தனக்கு நல்லாதிருக்காது என்று பிரேமதாசா எண்ணியிருப்பார். ஆகையால் சிவராசனைப் பயன்படுத்தி ராஜீவைக் கொன்றுவிட்டு அந்தப் பழியைப் புலிகள்மீது போட்டு தனக்கு அருகில் உள்ள நாட்டின் அதிகாரத் தலைமைமையத் திணறடித்து, தனக்கு எதிராக உள்ள புலிகளை தமிழகத்தில் இருந்து வேரறுக்கவும் பிரேமதாசா முயன்றிருக்கலாம்.

இதில் பிரேமதாசாவும் றோவும் ஒன்றிணைந்துகூட வேலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ராஜீவ் கொலைக்குப் பின்னர் பிரேமதாசாவும் கொலை செய்யப்படுகிறார். என்ன ஒற்றுமை என்றால் ராஜீவ் கொலைசெய்யப்பட்ட மாதிரியே கொல்லப்படுகிறார். ஒருவேளை பிரேமதாசாவை றோ போட்டிருக்கும் அதற்கு இரு காரணங்கள் இருந்திருக்கும். ஒன்று பிரேமதாசாதான் ராஜீவைக் கொன்றார் என்ற உண்மை றோவுக்குத் தெரிந்து பழிவாங்கியிருப்பார்கள், அல்லது ராஜீவைக் கொலைசெய்ய றோ செய்த திட்டம்பற்றி பிரேமதாசாவிற்கு அதிகம் தெரியும். கூடத் தெரிந்தவரை விட்டுவைப்பது றோவுக்கு நன்மைதராது எனவே பிரேமதாசாவைப் போட்டிருக்கலாம்.

அடுத்ததாக பிரேமதாசாவை புலிகள் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதாவது இந்திய ராணுவத்தை நீக்க தங்களுடன் ஒத்துழைத்துவிட்டு தங்கள் முதுகில் பிரேமதாசா குத்தியதை உணர்ந்த புலிகள் பிரேமதாசாவைப் பரலோகம் செல்ல வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதில் மட்டும் புலிகள் பலிக்கடா ஆகவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கம், யோகேசுவரன், ஆலாலசுந்தரம் போன்றவர்களையும் றோதான் தட்டியிருகு;கவேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அமிர்தலிங்கத்தையும் யோகேசுவரனையும் கொழும்பில்வைத்து தட்டியது மாத்தையாவின் கையாள் விசு. ஆனால் மாத்தையா மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் பிரபாகரனுக்கு எதிராகச் சதி செய்திருந்ததால் பின்னர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் பின்னணியில் றோ இருந்ததைப் புலிகள் இனம்கண்டதும் குறிப்பிடத்தக்கது (மீண்டும் ராஜீவ் கொலைவழக்கில் மாத்தையா பெயர் அடிபடாததையும் கவனிக்கவும்).

ஆனால் அமிர்தலிங்கத்தைத் தாம்தான் கொன்றதாகப் புலிகள் பொறுப்பேற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் புலிகள் ஒத்துக்கொள்ளாவிட்டால் புலிகளின் பலம் குன்றிப்போனதாகவும், மாத்தையா பிளவுபற்றிய சம்பவங்கள் பலவற்றை வெளியே தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் புலிகள் மூடிமறைத்துவிட்டனர்.

அண்மையில் பார்த்த திரைப்படம் ஒன்றில் உருசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அணு ஆயுதப்போர் நடக்கச் செய்ய நாசியைச் சேர்ந்தவர்கள் திட்டம்போடுகிறார்கள். அதில் முதற்கட்டமாக உருசியாவில் இருந்து பிரிந்துசென்ற நாடொன்றின்மீது சிலரின் சதிவேலையால் உருசியப்படைகள் வேதியல் குண்டை வீசுகிறார்கள், பல உயிர்கள் பலியாகின்றன. உடனே உருசிய முதல்மந்திரி தொடர்புகொள்ளப்படுகின்றார். வேதியல் குண்டு வீச்சை உருசியாதான் செய்ததா என்று வினவப்படுகின்றார். அதற்கு ‘ஆம், நான்தான் செய்தேன், ஏன் அமெரிக்கா கிரோசிமாமீதும் நாகசாகிமீதும் குண்டுபோடவில்லையா?” எனக்கூறித் தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கின்றார்.

சிலவேளைகளில் அரசுகளும் இயக்கங்களும் தாம்செய்தாதவற்றை சூழ்நிலை காரணமாக தாம் செய்ததாக ஏற்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஒன்று தமது பலவீனத்தை மறைக்க, இன்னொன்று ரகசியங்களைப் பாதுகாக்க. ராஜீவ் காந்தியின் கொலைபின்னால் புலிகளைவிட வேறொரு கை இருக்கவேண்டும். ஆனால் அந்தக் கோணத்தில் விசாரனைகள் எதையும் இந்தியா மேற்கொள்ளாததும் தட்டிக்கழித்ததும் இதில் காங்கிரசுக் கட்சி மற்றும் றோ அல்லது சிங்கள அரசு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றே அறியப்படுகின்றது. இந்திய அமைதிப்படை காலத்திலும், அதற்குப் பின்னரும் புலிகளை மக்களிடம் இருந்து பிரிக்க பல அரசியல் படுகொலைகளை வெளிநாட்டு சக்திகளும் சிங்கள அரசும் செய்துவிட்டு பழியைப் புலிகள்மீது போட்டுவிட்டனர். அவ்வாறாகவே ராஜீவ் கொலையும் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.