பொன்னியின் செல்வனில் நயன்ராய்

பொன்னியின் செல்வனில் நயன்ராய்

5 April 2019 12:00 pm

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் திரைப்படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்.

பட்ஜெட் உள்ளிட்ட சில விடயங்களினால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது இந்த திரைப்படம்.

கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம்.

ஆனால், அது கைகூடவில்லை. எனவே, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும்.

எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.

இதேவேளை நடிகை நயன்தாராவும் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு இறுதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பை 3 மாதங்கள் முன்பாக செப்டம்பரில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதலில் கார்த்தி, ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மகாவீர் கர்ணா படத்தை முடித்து டிசம்பரில் விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.