இராணுவச் சிப்பாய்க்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்

இராணுவச் சிப்பாய்க்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்

30 July 2018 08:39 am

அனுராதபுரம் இப்பலோகம கட்டியன்கல்ல கிராமத்தில் 9 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவச் சிப்பாய் ஒருவரை ஊர் மக்கள் தாக்கியதால், அவர் காயமடைந்த நிலையில், கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பலோகம சேனபுர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான திருமணமான இராணுவச் சிப்பாயே இவ்வாறு ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சந்தேக நபர் அதே பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வருகிறார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சிறுவனின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு தெரியாமல், சிறுவனை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் சந்தேக நபரிடம் இருந்து தப்பி வயல் வழி ஊடாக சுமார் ஒரு மைல் தூரம் ஓடி வந்த போது சந்தித்த கிராமவாசியுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததை அடுத்து கிராம மக்கள் சேர்ந்து இராணுவச் சிப்பாயை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர், கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.