மலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு

மலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு

20 August 2018 04:18 am

மலையகத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேர்ந்த அனர்த்தத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மலையக பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக, தலவாக்கலை நானுஓயா தோட்டத்திலும், டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அருகேயும் மண்சரிவு ஏற்பட்டது.

அத்துடன் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும், தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியிலும், சிங்கமலை சுரங்கப்பகுதிக்கு அருகாமையிலும் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் இரு பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. தொடர்ந்தும் அப்பகுதியில் மழை விடாது பெய்து வருகின்ற நிலையில் சாரதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காசல்ரீ நீர்தேக்கம் உயர்வடைந்து அணைக்கு மேலாக நீர் பாய்ந்து வருகின்றது, இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் உள்ள ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்ததுடன், குறித்த நீர்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாவலப்பிட்டி கொலப்பத்தனை பகுதியில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அயலவர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அப்பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நுவரெலியாவில் மட்டும் 291 குடும்பங்களும், தலவாக்கலை – நானுஓயா பகுதியில் உள்ள எட்டு குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன.

மேலும் தலவாக்கலை – நானுஓயா தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக, அப்பகுதியில் தங்கியிருந்தவர்கள் அயலவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன.