ஜனாதிபதி ஊடக விருது தமிழ் தெரிவில் குளறுபடிகள்!

ஜனாதிபதி ஊடக விருது தமிழ் தெரிவில் குளறுபடிகள்!

7 April 2019 03:16 am
ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில் பல்வேறு சர்ச்சைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி விருது வழங்கல் விழாவின் அழைப்பிதழில் தமிழ்ப் பிழைகள் இருப்பதாக ஒருபுறம் சர்ச்சைகள் கிளம்ப, இந்த விருது தெரிவுகளில் நடுவர்கள் குளறுபடிகளை நடத்தியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி விருது வழங்கலில், நடுவர்களின் திட்டமிட்ட வழிபாங்கலுக்கு சில ஊடகவியலாளர்கள் உட்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உதாரணமாக, தினகரன் பத்திரிகையை எடுத்துக்கொண்டால், அவர்களிது ஆக்கங்களும், அங்குள்ள ஊடகவியலாளர்கள் விண்ணப்பங்களும் ஆராயப்படாமல் புறக்கணிக்கப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தமிழ் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டால், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார். இதுசம்பந்தமாக எவ்வித கருத்துக்களோ, ஆலோசனைகளோ தங்களிடமிருந்து பெறப்படவில்லை என அவர் கைவிரித்துவிட்டார். ஊடகப் பிரிவு தமிழ்ப் பிரிவையும் நடுவர்கள் ஒதுக்கிவைத்துள்ளதாக அறியமுடிகிறது.

ஒரு சில அரசியல் பின்புலத்துடன் செயற்பட்டுள்ள நடுவர்கள் சிலர், திட்டமிட்டு சில ஊடகவியலாளர்களை பழிதீர்த்துள்ளதாகவும், தமக்குத் தேவையான, பிடித்தமானவர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எவ்வித விளக்கத்தையும் நடுவர் குழு முன்வைக்கவில்லை.

எனவே, விருதுகளை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆக்கங்களை  தகுதியான தமிழ் அறிஞர்களிடம் கையளித்து விருதுக்கு பொருத்தமானவர்கள், மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் மத்தியில் வலுவான கருத்துக்கள் நிலவ ஆரம்பித்துள்ளன. சரியான தமிழ் மொழி பிரயோகங்களுடன் கூடிய அழைப்பிதழ், அத்துடன் விருது பெற முறையாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஆகிய விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தமிழ் மொழி ஊடகவியலாளர்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது

அதி சிறந்த ஊடக கலாசாரத்திற்கான ஜனாதிபதி ஊடக விருது 2018 ஐ  பெறுவதற்காக தெரிவானவர்களை தெரிவு செய்த குழுவில் இருந்தவர்கள் தமக்குத் தேவையானவர்களையே தெரிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. அரசாங்க பத்திரிகையான தினகரன் மற்றும்  ஜனாதிபதியின் தமிழ்  ஊடகப் பிரிவு ஆகிய அரச நிறுவனங்களே விருது வழங்கலில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது. ஜனாதிபதியின் தமிழ் ஊடக பிரிவின்  பணிப்பாளர்  இப்போதாவது வாய் திறப்பாரா? நடந்ததை சொல்வாரா? அவரை ஏன் ஜனாதிபதி கறிவேப்பிலையாக தூக்கியெறிந்து விட்டார்.? அவர் மீது நம்பிக்கை இழக்கப்படுவதற்கு அவர் செய்த தவறுதான் என்ன? என்ற பல கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

‘அழைப்பிலும் தவறு, தெரிவிலும் தவறு’ என்றாகிவிட்ட  அதி சிறந்த ஊடக கலாசாரத்திற்கான ஜனாதிபதி ஊடக விருது 2018 ஐ புறக்கணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதை சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். ‘முறையான அழைப்பு, சரியான தெரிவு’ என்று ஜனாதிபதி ஊடக விருதுகள் கௌரவம் பெற வேண்டும்.

எமது கோரிக்கை தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை அமைச்சர் மனோ கணேசனிடம் முன்வைக்கிறோம். அவர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, விருது வழங்கும் நிகழ்வை செம்மைப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

ஊடகத்துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள். அந்த தூணை வலுப்படுத்தும் ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் பக்கசார்ப்பு போக்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டியது அமைச்சர் மனோ கணேசனின் பொறுப்பு.