லசந்தவை கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரியை திருப்பி அனுப்பியது யார்?

லசந்தவை கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரியை திருப்பி அனுப்பியது யார்?

30 July 2018 03:11 pm

பிரபல ஊடகவியலாளர் சண்டே லீடர் பத்திரிகை முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கைது செய்யப்படவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் இரகசிய பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்து இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 11ம் திகதி சிசிர மென்டிஸ் வாக்குமூலம் அளித்ததுடன் அதன்போது லசந்த கைது குறித்து தகவல் வௌியிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஜனவரி லசந்த கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி பிரதி பொலிஸ்மா அதிபர் அசோக விஜேதிலக தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு லசந்தவை கைது செய்யுமாறு பணித்ததாக சிசிர மென்டிஸ் கூறியுள்ளார். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய பங்கர் குறித்து சண்டே லீடர் பத்திரிகையில் தகவல் வௌியிட்டமை தொடர்பிலேயே கைது செய்ய காரணமாகும்.

கோட்டாவின் பணிப்பு

லசந்தவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படாமையால் கைது செய்வதை சிசிர மென்டிஸ் தவிர்த்துள்ளார். அதன்பின் 26,27,28ம் திகதிகளில் தொடர்ந்து மென்டிஸுக்கு அழைப்பெடுத்த அசோக வி​ஜேதிலக எப்படியாவது கைது செய்யுமாறு பணித்துள்ளார். முறைப்பாடு இல்லாமல் எப்படி கைது செய்வது என மென்டிஸ் கேள்வி எழுப்பியபோது, இது கோட்டாபாயவின் உத்தரவு என சிசிர குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, லசந்தவை கைது செய்ய தான் சென்றதாகவும் லசந்த கைது செய்யப்படவுள்ளதாக சிசிர மென்டிஸ் இரகசிய பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். அப்போது தனக்கு தொலைபேசி அழைப்பெடுத்த அசோக விஜேதிலக லசந்தவை கைது செய்ய வேண்டாம் என பணித்ததாகவும் அதன்பின் தான் திரும்பி வந்ததாகவும் சிசிர மென்டிஸ் கூறியுள்ளார்.

லசந்த யார்?

கொலை நடந்து பல வருடங்களின் பின் லசந்த கொலை தொடர்பில் ஊடகவியலாளர் வினவியபோது 'லசந்த யார்' என்று கோட்டாபய ராஜபக்ஷ வினவியுள்ளார். லசந்த சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கோட்டாபய மறந்திருந்தாலும் மக்கள் மறக்கவில்லை.

இன்று சட்டத்தின் ஆட்சி, நீதிமன்ற சுயாதீனம், பொலிஸ் சுயாதீனம், ஜனநாயகம் குறித்து உபதேசம் செய்யும் கோட்டாபாய போன்றவர்கள் அன்று சட்டம், நீதிமன்றம், பொலிஸாரை தமக்கு தேவையானபடி பயன்படுத்திக் கொண்டனர். நீதிமன்றில் உள்ள சரத்துக்களை பயன்படுத்தி தன்னை கைது செய்வதை தடுக்குமாறு தடை உத்தரவு பெற்ற கோட்டாபாய, அன்று தமக்கு எதிராக செயற்பட்ட நபர்களை முறைப்பாடு இன்றி கைது செய்ய கட்டளை பிறப்பித்தவர் என்பதை மக்கள் உணர்வர்.

லசந்த விக்ரமதுங்க கூறியதுபோல் அலரிமாளிகைக்கு அடியில் பங்கர்ஒன்று அமைக்கப்பட்டிருந்தை ஊடகங்கள் செய்தியாக வௌியிட்டிருந்தன. மக்கள் பணத்தை வீணடித்து ஆட்சியாளர்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்துவது ஊடகவியலாளர்களின் கடமை. ஆனால் சட்டம் இருண்ட யுகமான ராஜபக்ஷ யுகத்தில் ஒருவர் உயிரை பறிக்கும் அளவிற்கு போய்விட்டது.

இன்று தமது கைகள் சுத்தம் என முணுமுணுக்கும் ராஜபக்ஷக்கள், லசந்த கொலையுடன் தொடர்பு என்பதற்கு இந்த செய்தி முக்கிய சான்றாகும். லசந்த கொலை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லசந்தவின் மகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளதுடன் விசாரணை துரிதப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.