'சுரக்‌ஷா காப்புறுதி' மாணவர்களுக்கா? நிறுவனத்திற்கா?

'சுரக்‌ஷா காப்புறுதி' மாணவர்களுக்கா? நிறுவனத்திற்கா?

3 August 2018 07:18 am

43 லட்சம் பாடசாலை மாணவர்களை மையப்படுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள 'சுரக்‌ஷா காப்புறுதி' திட்டம் மாணவர்களின் நன்மைக்கு அல்லாது காப்புறுதி நிறுவனத்தின் நன்மைக்கு ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதில் கல்வி அமைச்சர் சுற்றறிக்கைகளை மதிக்காது செயற்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்முறை வரவ செலவுத் திட்டத்தில் குறித்த காப்புறுதித் திட்டத்திற்கென 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பாதியில் 52 மில்லியன் மாத்திரமே மாணவர்களுக்கு நன்மையாக கிடைத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமயத்தில் குறித்த பணத்தில் 90% இந்திய காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் மீள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த மீள்காப்புறுதி ஊடாக 100 மில்லியன் தரகு பணம் கிடைப்பதாக கல்வி அமைச்சர் கூறியுள்ள நிலையில் அது தவறு என ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நிதி அமைச்சின் 04/2015 சுற்றறிக்கைபடி அரச நிறுவனங்கள் தரகு பணம் பெறுவது சட்டவிரோதமானதாகும். கல்வி அமைச்சர் சுற்றறிக்கையை மீறி சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் அக்ரகார காப்புறுதியில் உள்ள 12 மில்லியன் ரூபா மீள்காப்புறுதி செய்யப்படவில்லை. அப்படியிருக்கையில் சுரக்‌ஷா காப்புறுதி பணம் ஏன் மீள்காப்புறுதி செய்யப்பட்டதென ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு இரண்டு லட்சம் கிடைப்பதாக கூறப்பட்டாலும் அது பொய் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறிருக்கையில் அதனை அமைச்சர் 5 லட்சமாக மாற்றவுள்ளதாக கூறுவது வேடிக்கையென சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.