வடக்கில் சீன ஆதிக்கத்தை விரும்பாத இந்தியா.!

வடக்கில் சீன ஆதிக்கத்தை விரும்பாத இந்தியா.!

3 August 2018 07:47 am

வடக்கு மாகாணத்தில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டிவந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதி அண்மையில் இலங்கைக்கு வந்து இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வட பகுதிக்கு சீனா உள்நுழைவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என மோடியின் விசேட பிரதிநிதி அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் பகுதியில் சீனாவின் திட்டங்கள் பாதிப்பில்லை என்றும் அவர்கள் வடக்கு நோக்கி நகர்வது தமக்கு பாதிப்பு என்றும் இந்திய விசேட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள தொலைத் தொடர்புத் திட்டம், விமான நிலையத் திட்டம் போன்றவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதனால் வடக்கில் சீனாவின் திட்டங்களை அரசாங்கத்திற்கு நிறுத்த நேரிட்டுள்ளது.

மற்றுமொரு விசேட தகவல்...

இதேவேளை, வடக்கில் 50000 வீட்டுத் திட்டம் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. இதற்கு விலைமனு கோரப்பட்டபோதும் குறைந்த விலைமனு கொடுத்த நிறுவனம் பின்தள்ளப்பட்டு கூடிய விலைமனு கொடுத்த நிறுவனங்களும் பின்தள்ளப்பட்டு விலைமனு கொடுக்காத china Railway நிறுவனத்திற்கு வீடமைப்புத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இந்தியாவிற்கு தெற்கு சீனாவிற்கு என்று ஒதுக்கப்பட்டுவிட்டால் பின் இலங்கை மக்களுக்கு எது கிடைக்கும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஆனால் இன்று சீனா இலங்கைக்குள் ஊடுறுவி முடிந்துவிட்டது. நாட்டின் சுயாதீனம் குறித்து இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷக்களே சீனாவை இலங்கைக்குள் ஊடுறுவ அனுமதித்தனர் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.