ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

8 August 2018 11:57 am

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் ஞானசாரர் மீதான தீர்ப்பை இன்று அறிவித்தனர்.

நீதிமன்றத்தின் இறைமைக்கும், கௌரவத்திற்கும் சவால் விடுத்தமை, அகௌவரம், அபகீர்த்தி ஏற்படுத்தியமை, நீதியை நிலைநாட்டுவதற்கான நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை அநாவசியமான நடத்தையால் அரசியலமைப்பின் 105 ஆவது சரத்தை மீறியதன் மூலம் தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமொன்றை இழைத்துள்ளமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் தேரர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஞானசார தேரர் குற்றவாளியாக காணப்பட்டதுடன், அவருக்கு ஆறு வருடங்களால் நிறைவடையும் வகையில் 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவிக்குமாறும், தீர்ப்பை இன்றே அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதுடன், அவர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தணி, தேரர் ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்டார்.

ஹோமாகாண முன்னாள் நீதவானும், கொழும்பு பிரதம நீதவானுமாகிய ரங்க திசாநாயக்கவினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், சட்டமா அதிபரால் ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெல்லிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு, ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் அரச சட்டத்தரணிகளுக்கு அவதூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஞானசார தேரர், தாம் நிரபராதி என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பான ஹோமாகம முன்னாள் நீதவான் ரங்க திசாநாயக்க, அரச தரப்பு பிரதி மன்றாடியார் நாயகம் உள்ளிட்ட காவல்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் சாட்சியங்களை முன்வைத்திருந்தார்.

பிரதிவாதியான ஞானசார தேரரும் தமது தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்திடம் முன்வைத்தார்.

ஞானசார தேரர் சார்பாக இன்று மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனையடுத்து 29 ஆம் திகதி வரை ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.