பசில் ராஜபக்‌ஷ அவசரமாக நாடு திரும்பிய காரணம் என்ன?  

பசில் ராஜபக்‌ஷ அவசரமாக நாடு திரும்பிய காரணம் என்ன?  

26 September 2018 02:49 pm
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வௌிநாட்டுப் பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பிய காரணம் தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான கருத்துக்கள் பரவி வருகின்றன.
 
கடந்த ஜூலை மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின் பிரகாரம் ஆகஸ்ட் 10 தொடக்கம் நவம்பர் 10 வரையான மூன்று மாத காலப்பகுதியில் வெளிநாடு செல்ல அனுமதி அளித்திருந்தது. அதற்காக இரண்டு லட்சம் ரூபா ரொக்கப் பிணையில் அவரது பாஸ்போர்ட் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தது. 
 
எனினும் கடந்த 25ம் திகதியே பசில் ராஜபக்‌ஷ அவசரமாக நாடு திரும்பியிருந்தார்.
 
தனது சகோதரன் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே தான் அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்ட ஜனபலய எதிர்ப்பு நடவடிக்கைக்கு பசில் ஆதரவு வழங்கியிருக்கவில்லை. அத்துடன் தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனபலயவுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள வைத்திருந்தார்.
 
இவ்வாறான நிலையில் கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிரான வழக்குகள் காரணமாகவே பசில் அவசரமாக நாடு திரும்பியுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
 
எதிர்வரும் வாரங்களில் கோட்டாபய மட்டுமன்றி மஹிந்த, பசில், நாமல் ஆகியோருக்கு எதிரான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாவும் அதன் காரணமாகவே பசில் அவசரமாக நாடு திரும்பியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது