11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு - சட்டமா அதிபர் இழுத்தடிப்பு

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு - சட்டமா அதிபர் இழுத்தடிப்பு

19 December 2018 04:45 am

கப்பம் பெறும் நோக்கில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் போகச் செய்த வழக்கில் சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ள போதும் யாரோ ஒருவரின் தேவைக்காக சட்டமா அதிபர் அதனை செய்யாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு ஒகஸ்ட் 8ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 17ம் திகதிவரையான காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்போதைய கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடற்படையைச் சேர்ந்த சம்பத் முனசிங்க, டி.கே.பி.தஸநாயக்க, சுமித் ரணசிங்க, லக்ஷமன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தர்மதாஸ, ராஜபக்ஷ கித்சிரி, கஸ்துரிகே காமினி, அருண துசார மென்டிஸ் ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சஜ்சீவ பிரசாத் சேனாரத்ன மற்றும் ஆரூட் என்று அழைக்கப்படும் அன்னாவி ஆகியோர் டிசம்பர் 14ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களம் அதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

இந்த வழக்கை சிரேஸ்ட அரச சட்டத்தரணி ஜனக்க பண்டார முன்னெடுத்துச் செல்கிறார். அவர் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றபோதும் விசாரணையை இழுத்தடிப்புச் செய்ய அவருக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.