நாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைகளைத் தடுக்க முயற்சி

நாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைகளைத் தடுக்க முயற்சி

1 February 2019 10:55 am

கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் நிலை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற சபைக்குள் குழப்பமாக நடந்துகொண்டதால் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

சபாநாயகரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே நாடாளுமன்ற பொலிசார் சபைக்குள் வந்தனர். இந்த பொலிசார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குற்றச் செயலுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினர் குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்துவைத்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியைப்  பெற்றிருந்தது.

எனினும், குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் தலையீட்டினால் குறித்த விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்தச் சம்பவம் குறத்து விசாரிக்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக சவில் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் நகைப்பிற்குரியதாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்தும் நடந்து முடிந்துவிட்டதால் அவற்றை மீளவும் கிளறுவதில் எவ்வித பயனும் இல்லையென குறித்த தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், சபாநாயகரை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவருகிறது.