ரத்துபஸ்வல கொலையாளிகளுக்கு காவல் யார்?

ரத்துபஸ்வல கொலையாளிகளுக்கு காவல் யார்?

1 February 2019 11:16 am

குடிநீர் கோரி ரத்துபஸ்வல பிரதேசத்தில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இராணுவத்தினர் அழைக்கப்பட்டு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். 40 பேர் வரை காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டு, விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த போதிலும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் 01ஆம் திகதி ரத்துபஸ்வெல பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ராஜபக்ச ஆட்சியில் உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் இந்தச் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

குறித்த சம்பவம் நடந்த அன்று துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு, கட்டளையிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட இராணுவத்தினர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய பிரிகேடியர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் மூவரும் தண்டனைச் சட்டம் 294இன்படி மனித படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டுக்களை எதிர்கொள்ளக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.