மோசடி ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் R.M.V ஜகத்

மோசடி ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் R.M.V ஜகத்

4 April 2019 06:28 am
ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி மற்றும் அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் துசார சுரவீர ஆகிய இருவரும் திணைக்களத்திற்குரிய ஆவணங்கள் சிலவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்குத் தேவையான திணைக்கள ஆவணங்களையே அழிக்க முயன்றுவருவதாக தெரியவருகிறது.

கடந்த காலத்தில் வரி செலுத்தாமல் பதியப்பட்ட வாகனங்களின் ஆவணங்களையும், முறைகேடான டென்டர் (கேள்வதிப் பத்திரங்கள்) ஆவணங்களையும், முறைகேடாக பதியப்பட்ட வாகனங்களின் ஆவணங்களையும் அழிப்பதற்கு துசார சுரவீர நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

துசார சுரவீர என்ற அதிகாரி இதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியிருந்த நிலையில், ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களினால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தார். டென்டர் மோசடியில் ஈடுபட்டிருந்த துசார சுரவீரவை, மோட்டார் திணைக்கள ஆணையாளர் ஜகத் சந்திரசிறி, தமது திணைக்களத்திற்கு உள்வாங்கியிருந்தார். இதன்பின்னர் கடந்த காலங்களில் பல மோசடியான டென்டர் பரிவர்த்தனைகளை துசார என்ற அதிகாரி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மோட்டார் திணைக்களத்திற்கு வந்தபின்னர், குறுகிய காலத்திற்குள் கோடீஸ்வரனாகிய துசார சுரவீர, அண்மையில் கடுவலை பிரதேசத்தில் 100 மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுதி வீடொன்றை நிர்மாணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

குறித்த இரண்டு அதிகாரிகளும் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதவியில் இருக்கும் வரையில் போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணையும் நியாயமாகவும், பக்கசார்பற்ற முறையிலும் நடக்காது என்று மோட்டார் வாகன திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
- VAK