ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்குக்கு வணக்கம்!

ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்குக்கு வணக்கம்!

6 April 2019 04:29 am
பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். தற்போதைய நீதியரசருக்கு 65 வயது பூர்த்தியாவதே இதற்குக் காரணமாகும். இதன்படி சித்திரைப் புத்தாண்டின் பின்னர் புதிய நீதியரசர் ஒருவர் பதவியேற்கவுள்ளார்.

ஓய்வுபெறவுள்ள அவருக்கு பிரியாவிடை அளிக்கும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய நியமிக்கப்பட்டார்.

பிரதம நீதியரசராக பதவியேற்ற பின்னர் நளின் பெரேரா பல முக்கிய தீர்ப்புக்களை வழங்கியிருந்தார். அதில் கடந்த ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

புதிய பிரதம நீதியரசர் பதவி யாருக்கு : சிலரின் பெயர்கள்

அடுத்த சில வாரங்களில் புதிய பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இந்தப் பதவிக்கு தகுதியான சிலரின் பெயர்கள் தற்போது ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பரிந்துரைப் பட்டியலில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் உள்ளார். அவர் எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதியுடன் சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். 60 வயது பூர்த்தியாவதால் அவர் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். அவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் சுமார் ஐந்து முதல் ஐந்தரை ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பதற்கான வாய்புக்கள் இருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மத்தியில் புவனெக அளுவிகார, சிசிர அப்ரோ, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களின் பெயர்களும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஜனாதிபதியினால் இந்தப் பரிந்துரைப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அடுத்த சில வாரங்களில் புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார்.