நாடாளுமன்ற சண்டியர்களுக்காக முன்னிலையாகும் திலக் மாரபன!

நாடாளுமன்ற சண்டியர்களுக்காக முன்னிலையாகும் திலக் மாரபன!

11 April 2019 09:26 am
நாடாளுமன்றத்தில் குழப்பகரமாக செயல்பட்டு, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பொலிசார் மீது தாக்குதல் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து வாக்குமூலம் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றங்சாட்டப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அழைப்பை குறித்த எம்.பிக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் குறித்த எம்.பிக்களைக் கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அனுமதி கோரியிருந்தனர். எனினும், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக கரு ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால் இந்த முயற்சியும் தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த குழப்பங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை முன்னாள் சட்டமா அதிபரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், வெளிவிவகார அமைச்சருமான திலக் மாரப்பனவிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து செயல்பட்ட வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளை அழைத்து, இந்த விசாரணைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக நாடாளுமன்ற இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பதாகவும், இதில் கலந்துரையாடிய பின்ன் இதுகுறித்து அறிவிக்கும் வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் விசாரணை அதிகாரிகளிம் கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்துள்ள விசாரணை அதிகாரிகள், பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஆகிய சம்பவங்கள் குறித்து குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருவதாகவும், எனவே, நாடாளுமன்ற இடைக்காலக் குழுவிற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.

எனினும், அமைச்சர் மாரப்பன தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், நாடாளுமன்ற சபைக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், இதுகுறித்து நாடாளுமன்றத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளர்.

இதன்மூலம் தெரியவருவது என்னவெனில், மீண்டும் அனைத்து திருடர்களும், சண்டியர்களும் இணைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பிரிவின் விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்தார்.