இலங்கையின் பொருளாதாரம் சரிவடையவில்லை – மங்கள

இலங்கையின் பொருளாதாரம் சரிவடையவில்லை – மங்கள

10 October 2018 03:39 am

இலங்கையின் பொருளாதாரம் சரிவடையவில்லை எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை நாட்டில் பொருளாதார சரிவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர்கள் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளதால் நாட்டின், பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், எந்தவோர் பொருளாதார நிபுணரும் ரூபாவின் வீழ்ச்சியை கொண்டு பொருளாதார சரிவை கணிப்பதில்லை. மேலும், தமது காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவையெல்லாம் மறந்துவிட்டு, நேற்று பிறந்த குழந்தைகள் போல்தான் எதிரணியினர் தற்போது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் 2015ஆம் ஆண்டில் பெரும் கடன் சுமையுடன் கூடிய நாட்டையே எம்மிடம் ஒப்படைத்தனர். மஹிந்த ஆட்சியிலேயே முதல் முறையாக அரச வருமானத்தை விடவும் செலவீனம் அதிகரித்து காணப்பட்டது. இலங்கை வரலாற்றிலேயே இவ்வாறு செலவீனம் அதிகரித்தமையும் இதுவே முதல்முறையாகும்.

இதனால், அரச வருமானத்தில் 60 வீதம் கடன் செலுத்துவதற்காக பயன்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நாட்டை பலப்படுத்தாமல் தமது குடும்பத்தை பலப்படுத்த ராஜபக்ஸவினர் முற்ப்படைமையே இந்த நிலைமைக்கு காரணமாகும். இவ்வாறான நாட்டை நாம் பொறுப்பேற்ற பின்னர். 2016 ஆண்டில் அதிக ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.

அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் கடனையும் நாம் அடைத்து வருவதோடு, ஏற்றுமதியை பலப்படுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறோம்.

எவ்வாறாயினும், இன்றளவில் நாட்டின் பொருளாதாரம் சரிவடையவில்லை என்பதே உண்மையான நிலவரமாகும். பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவும் நாமும் இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் சரிவடைய விடப்போவதில்லை.

டொலரின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளமையால், அதன் தாக்கங்களுக்கு சிறப்பான முறையில் முகம்கொடுக்க இலங்கை தயாராகவே உள்ளது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 4 வீதமாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

விஷன் 2025 திட்டத்தின் கீழ் இலங்கையை நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லவும் நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.