இழப்பீட்டுச் சட்ட மூலம் நிறைவேற்றம் – மகிந்த அணி போர்க்கொடி

இழப்பீட்டுச் சட்ட மூலம் நிறைவேற்றம் – மகிந்த அணி போர்க்கொடி

10 October 2018 02:39 pm

இழப்பீட்டுச் சட்டமூலமானது – கூட்டுஎதிரணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தில் நேற்று 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மஹிந்த அணியைத்தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம்மீதான விவாதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

ஆளும், எதிரணி உறுப்பினர்கள் உரையாற்றி முடித்த பின்னர் மாலை 6.25 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. ஒரு சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவே இச்சட்டமூலத்தை அரசு நிறைவேற்ற முற்படுகின்றது என மஹிந்த அணியின் சார்பில் உரையாற்றிய உறுப்பினர்கள் கடுமையாக சாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.