கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

11 October 2018 02:48 am

2016ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் 15ஆம் திகதியோடு முடிவடையவுள்ள நிலையில், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக, முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட இரண்டாம் கட்டப் பேச்சுவார்ததையும் தோல்வியில் முடிவடைந்தது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளும் ஊடகங்களுக்கு முன்னுக்குப் பின் முரணான கருத்து​களைத் தெரிவித்திருந்தமையை, இங்கு அவதானிக்கக் கூடியதாக இருந்ததோடு, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகங்களுக்குப் பொய்யுரைப்பதாகவும், முதலாளிமார் சம்மேளனம் குற்றஞ்சாட்டியது.

வழமையான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைப் போன்று, மூடிய கதவுகளுக்குப் பின்னால், நேற்று (09)​ மாலை மூன்று மணியளவில் ஆரம்பமான இந்தப் பேச்சுவார்தையில், நுவரெலியா மாவட்ட எம்.பியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அக்கட்சியின் உபதலைவர் மாரிமுத்து, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வடிவேல் சுரேஷ் மற்றும் கூட்டுக் கமிட்டியின் சார்பில் இராமநாதனும் கலந்துகொண்டு, முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டனர்.

9ம் திகதி 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தையிலிருந்து, பாதியில் சிரித்த முகத்துடன் வெளியேறிய தொண்டமான் எம்.பி, ஐந்து நிமிடங்களில் மீண்டும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.

சுமார் அரை மணித்தியாலங்கள் கடந்திருந்த நிலையில், பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்து, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டு ஒப்பந்தப் ​பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

'அடிப்படைச் சம்பளம் ரூ.1,000ஆக உயர்த்தப்பட வேண்டும்'

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விளக்கங்களில், தமக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்த இ.தொ.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மேலதிகக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ‌ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும், பேச்சுவார்த்தைகளில் இணக்கமில்லை என்றால், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி, பாதீட்டில் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அடிப்படைச் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு ஆகியவற்றைச் சேர்த்து, 15 சதவீதம் அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதன்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பையே கோரியிருந்தீர்கள். தற்போதும், அதே ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பையே கோரியிருக்கிறீர்கள் என ஊடகவிலயாளர்கள் வினவி​யமைக்குப் பதிலளித்த தொண்டமான் எம்.பி, கடந்த முறை மேலதிகக் கொடுப்பனவுகள், அடிப்படைச் சம்பளத்துடனேயே 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரியிருந்தாகவும், ஆனால் இம்முறை அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதையே கோரிக்கையாக முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பளப் பேச்சுவார்த்தைகள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை, முதலாளிமார் சம்மேளனமே வழங்க வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

பாதீட்டினூடாக சம்பள உயர்வுக்கு வலியுறுத்து

ஆயிரம் ரூபாய் அல்லது 1,200 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பையே கோரியிருப்பதாகவும், ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், இம்முறை கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் கையெழுத்திடப்போவதில்லை என்றும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும், பாதீட்டினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க, தம்மோடு அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரச உத்தியோகத்தர்களுக்குப் பாதீட்டில் எவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுகின்றதோ, அதுபோல, தொழிலாளர்களின் சம்பளத்தையும் பாதீட்டினூடாக அதிகரிக்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாளை மறுதினம் வௌ்ளிக்கி​ழமை (12), முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும், அதில் தீர்க்கமான அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

'936 ரூபாய் வழங்க முன்வந்திருக்கிறோம்'

பெருந்தோட்டக் கம்பனிகளால் தீர்மானிக்கும் தொகையே, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமென தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பேச்சாளருமான, ரொஷான் ராஜதுரை, அதனைவிட சம்பள அதிகரிப்பொன்றை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கடந்தமுறை இடம்பெற்ற கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தையிலும், இம்முறை நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையிலும், தமது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

கே: நீங்கள் முன்வைத்திருக்கும் சம்பள உயர்வுத் தொகை எவ்வளவு?

ப: முன்வைக்கப்பட்டுள்ளதொகை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஒரு புரிந்துணர்வு செய்யப்பட்டுள்ளதால், அதனை வெளியில் கூற முடியாது.

கே: நீங்கள், 540 ரூபாய் சம்பள அதிகரிப்பையே முன்வைத்திருப்பதாகத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றனவே?

ப: இல்லை, அது தவறு. அடிப்படைச் சம்பளம் 575 ரூபாய் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுடன் சேர்த்து, 936 ரூபாய் சம்பள அதிகரிப்பை முன்வைத்திருக்கிறோம்.

கே: நீங்கள் குறிப்பிடும் இத்தொகை, தொழிலாளர்களுக்கு நியாயமானது என நினைக்கிறீர்களா?

ப: தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள அதிகரிப்பை வழங்கினாலும், போதாது என்றே கூறுவார்கள். எங்களுக்குக் கிடைக்கும் வருமானத்திலிருந்தே நாங்கள் சம்பளத்தை வழங்க வேண்டும்.

பெருந்தோட்டக் கம்பனிகள் எவ்வளவு நட்டத்தில் இயங்கினாலும், மாதாமாதம் 10ஆம் திகதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கி வருகிறோம். ஒருபோதும் சம்பளம் வழங்கப்படாமல் இருந்ததில்லை. பல பெருந்தோட்டக் கம்பனிகள் நட்டத்தில் இயங்கியதால் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாங்கள், நட்டத்தையும் பொறுத்துக்கொண்டு இயங்கி வருகிறோம்.