இழப்பீடு பணியக சட்டமூலம் நிறைவேற்றம்

இழப்பீடு பணியக சட்டமூலம் நிறைவேற்றம்

11 October 2018 08:04 am

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதனடிப்படையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் குறித்த திருத்தச் சட்ட மூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இழப்பீட்டுப் பணியகத்தினை நிறுவுவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகமானது அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

அரசியலமைப்பு சபையினால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நியமிக்கப்படத்தவறின், அவர்கள் அரசியலமைப்பு சபையினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக கருதப்படும் என சட்டமூலத்தின் 20 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பணியகத்தின் தலைமை அலுவலகம் கொழும்பில் அமையவேண்டும் எனவும், பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.