மதூசைக் காண்பித்து டுபாய் செல்ல முயன்ற தரப்பினருக்கு CID இடையூறு

மதூசைக் காண்பித்து டுபாய் செல்ல முயன்ற தரப்பினருக்கு CID இடையூறு

9 February 2019 05:44 pm

மாகதுரே மதூசை இலங்கைக்கு அழைத்து வருவதாகக் கூறி, அரச அதிகாரிகள் சிலர் டுபாய் செல்ல தயாராகி வருவதாக தெரியவருகிறது.

மாகதுரே மதுசைக் காண்பித்து பொதுமக்களின் பணத்தில் டுபாய் செல்ல சிலர் முயற்சி என்ற தலைப்பில் இதுகுறித்து நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களம், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டத் தரப்பினர் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அண்மையில் வந்திருந்தனர்.

மதூசை கைதுசெய்வதற்குப் பணியாற்றிய பிரிவில் இல்லாத அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

எவ்வாறாயினும், டுபாய் பயணம் குறித்து, கேட்டுக்கொண்டிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இறுதியில் கேள்வியொன்றை எழுப்பினர். ''நாம் டுபாய் சென்று யாரைச் சந்திப்பது'' என அவர்கள் கேட்டனர்.

இந்தக் கேள்வியை அடுத்து சில நிமிடங்கள் விடை தெரியாது முழித்துக் கொண்டிருந்த அதிகாரிகள்... ''இல்லை.. இனி அங்கு சென்று பொலிஸ் அதிகாரிகள் யாரையாவது சந்திக்க முடியும்'' என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த சீ.ஐ.டி அதிகாரிகள், ''கடந்த முறை உதயங்கவை அழைத்து வரச் சென்றபோது நடந்த சம்பவம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கிறது அல்லவா? அங்கு சென்றுஉயர் பொலிஸ் அதிகாரியொருவரைச் சந்திக்க முடியாது விடுதிகளுக்கு பணம் செலுத்தி வெறுமனே தங்கியிருந்துவிட்டு வந்துவிட்டோம்.'' என்று கூறினார்.

இதனையடுத்து மதூசை கைதுசெய்து அழைத்துவருவதாகக் கூறி டுபாய் சுற்றுலாச் செல்ல ஆயத்தமாகியிருந்த அதிகாரிகளின் பயணம் சீ.ஐ.டி. அதிகாரிகளினால் தடைப்பட்டது.