1000 ரூபாவிற்காக இரவில் ஜனாதிபதியை சந்தித்த முரளிதன்

1000 ரூபாவிற்காக இரவில் ஜனாதிபதியை சந்தித்த முரளிதன்

10 February 2019 03:27 am

அரசியல் விவகாரங்கள் சம்பந்தமாக விசேட அக்கறையுடன் செயற்பட்டு வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த புதன் கிழமை இரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

''தேசிய'' என்ற பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை மையப்படுத்தி, முத்தையா முரளிதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சந்திப்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக வாக்குகள் கையாளப்படும் விதம் தொடர்பான விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றுமாறு முரளிதரன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், ஜனாதிபதி மலையகத்தில் சாதகமான பதில் கிடைக்க தான் தலையீடுகளை மேற்கொள்வதாகவும் முரளிதரன் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முரளிதரனின் இந்த கோரிக்கை தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி பின்னர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தச் செய்தி குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கேட்டபோது, கடந்த புதன்கிழமை இரவு ஜனாதிபதி, ஆயிரம் ரூபா பிரச்சினை குறித்து விசேட சந்திப்பொன்று நடத்தியதாகவும், சம்பள விவகாரத்தை ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பது குறித்து வரும் 13ஆம் திகதி சந்திப்பொன்று நடக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தியது.
 
ஆனால் முத்தையா முரளிதரன் கலந்துகொண்டமை குறித்து எவ்வித ஊர்ஜிதத்தையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வழங்கவில்லை.