பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆராய வடக்கு ஆளுநர் அதிரடி

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆராய வடக்கு ஆளுநர் அதிரடி

10 February 2019 05:18 am

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

ஆளுநருக்கு கிடைத்த அதிகளவான முறைப்பாடுகளை அடுத்து விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கு ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

வட. மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று பேர்களை கொண்டதாக இந்த விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் இரு பெண்களும், முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்ட ஒருவரும் இடம்பெறவுள்ளனர்.

இதேவேளை வட. மாகாண கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றினை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அதன்படி, கல்வியமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.