TNAஇற்குள் புகையும் நெருப்பு - சுரேஸ் மீண்டும் எதிர்ப்பு

TNAஇற்குள் புகையும் நெருப்பு - சுரேஸ் மீண்டும் எதிர்ப்பு

15 April 2019 01:53 pm
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு உதவி வழங்கியதாகவும், அரசாங்கத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

அண்மையில் அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். எனினும், இந்த நிபந்தனைகள் எழுத்துமூலம் விதிக்கப்படவில்லையென சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிட்டவில்லையென அவர் தெரிவித்தார். கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவி பெறப்பட்டதாகவும், இதற்கு சுமந்திரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, அழுத்தம் கொடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்து வந்த போதிலும், இதனால் நன்மை ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்துபார்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இதன்பின்னர் பறிபோனது. இதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கியது.

இலங்கை அரசியல் தீர்மானமிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ள போதிலும், இதன்மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் இதுவரை கிட்டவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.