வளிமண்டலத்தில் தளம்பல் நிலை

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை

18 April 2019 04:44 am

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.