சஜித் - ரவி முரண்பாடு அவர்களது தனிப்பட்ட பிரச்சினை : ஐ.தே.க உறுப்பினர்கள்
Wednesday, 27 May 2020

சஜித் - ரவி முரண்பாடு அவர்களது தனிப்பட்ட பிரச்சினை : ஐ.தே.க உறுப்பினர்கள்

20 April 2019 05:10 am

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான முரண்பாடுகள் அவர்கள் இருவரதும் தனிப்பட்ட விடயமாகும்.

அதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடெனக் கருத முடியாது என அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஐ.தே.கவின் தவிசாரளர் கபிர் ஹசிம் தெரிவிக்கையில், அரசியலில் பிரச்சினைகள் ஏற்படுவது புதுமையான விடயமல்ல. இன்று முரண்பட்டுக் கொள்பவர்கள் நாளை ஒன்று சேர்ந்து கொள்வார்கள். எனினும் நாம் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாகவே செயற்படுகின்றோம். ஏதேனுமொரு பிரச்சினை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள்.

இது குறித்து அஜித் பி. பெரேரா தெரிவிக்கையில், இது அவர்கள் இருவருக்கிடையில் காணப்படும் தனிப்பட்ட பிரச்சினையாகும். இதனை நாம் கட்சி பிரச்சினையாகப் பார்க்கவில்லை. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானதாகும். எனவே இதனை பாரிய பிரச்சினையாககக் கருத முடியாது.

ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில், கட்சிக்குள் யார் முரண்பட்டுக் கொண்டாலும் , பெரும்பாலானவர்களுக்கு ஐ.தே.கவின் அடுத்த தலைவர் யார் என்பது தெளிவாகத் தெரியும். எனவே இதில் பொறுத்திருந்து பார்ப்பதற்கு எதுவுமில்லை. உரிய நேரத்தில் இதற்கான தீர்வுகள் முன்வைக்கப்படும். எனவே இது குறித்து யாரும் கவலையடையத் தேவையில்லை என்றார்.

இதே வேளை ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானமான உறுப்பினர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மக்கள் பிரச்சினை குறித்து கவலையில்லை. தத்தமது தேவைகளை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றனர். இவ்வாறானா அரசாங்கம் எவ்வாறு மக்களின் துன்பங்களை போக்கும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.